Friday, 22 April 2011

மூன்று மணி நேரம் இனி பவர்கட்..!



சென்னை: தமிழகத்தில் வரும் நாட்களில் மின் வெட்டை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, தமிழக மின் வாரியம் கைவிரித்துள்ளது. மின் வெட்டு சரியாகி சகஜ நிலை திரும்ப சில வாரங்களாகும் என்பதால், சென்னையைத் தவிர மாநிலத்தின் மற்ற பகுதிகளில் பகலில் தினமும் மூன்று மணி நேரம் மின் வெட்டு அமலில் இருக்கும். அது மட்டுமின்றி, சென்னையிலும் இதுவரை இல்லாத வகையில், இப்போது மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது. தினம் ஒரு மணி நேரம் சென்னையிலும் இனி மின் வெட்டு அமலில் இருக்கும் என, மின் வாரியம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கும், தொழிற்சாலைகளுக்கும் சீரான மின் வினியோகம் செய்ய முடியாமல், கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் திண்டாடி வருகிறது. இதற்கு தேவையான மின் உற்பத்தி இல்லை என கூறப்பட்டாலும், மின் உற்பத்தி நிலையங்களை சரியாக நிர்வகிக்காதது மற்றும் புதிய மின் திட்டங்களை உரிய வகையில் திட்டமிட்டு துவக்காதது போன்றவையே சரியான காரணங்களாகக் கூறப்படுகின்றன. மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, பிற மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டு வந்தது. தற்போது, பிற மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை நிலவுவதால், அங்கிருந்தும் மின்சாரத்தை வாங்க முடியவில்லை. மின் உற்பத்தியில் கணிசமான அளவு பங்களித்து வந்த காற்றாலை மின் உற்பத்தியும் போதிய அளவு இல்லை. பருவ நிலை மாறியுள்ளதால், காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துவிட்டது. அடுத்து வரும் மாதங்களில் நிலவும் பருவ நிலை மூலமே காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும். அதுவரை மின் பற்றாக்குறை நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில், வாக்காளர்களை மனதில் கொண்டு மின் வெட்டைக் குறைத்து அமல்படுத்தி வந்தனர். தற்போது, ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், வழக்கம் போல் மின் வெட்டு அமலுக்கு வந்துவிட்டது. மின் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், இதுவரை இல்லாத நிலையில், சென்னை மாநகரிலும், அறிவிக்கப்பட்ட மின் வெட்டு அமலுக்கு வருகிறது. எனவே, மின் பற்றாக்குறையை பொதுமக்கள் சமாளித்துக் கொள்ள வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் இடையூறுக்கு வருந்துவதாகவும் மின் வாரியம் கூறியுள்ளது.

வருத்தம்: இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: மின் பற்றாக்குறை என்பது தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்ததற்கு மாறாக, தற்போது நாடு முழுவதும் நிலவி வருகிறது. இதனால், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சில வாரங்களுக்கு, இந்த மின் பற்றாக்குறை நீடிக்கும் எனத் தெரிகிறது. நிலவி வரும் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க, தமிழ்நாடு மின் வாரியம் வேறு மாநிலங்களிலிருந்து நாள் ஒன்றுக்கு 50 கோடி ரூபாய் அளவிற்கு, மின்சாரத்தை வாங்கியும் கூட, நிலைமையை சரி கட்ட முடியவில்லை. வேறு வழியில்லாமல், வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தில், நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம் மின் வெட்டு என்பதற்குப் பதில், மூன்று மணி நேரம் பகலில் மின் வெட்டு செய்யப்படும். சென்னை மாநகரில் மட்டும், இதுவரை எவ்விதமான மின் வெட்டும் செய்யப்படாமலிருந்தது. இனி ஒரு மணி நேரம் பகலில் மின் வெட்டு இருக்கும். தவிர்க்க முடியாத நிலையில், மின் வாரியம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைக்காக பெரிதும் வருந்துகிறோம்.

இன்னும் ஒரு சில வாரங்களில் காற்றாலைகள் மூலமாகக் கிடைக்கும் மின்சாரம் அதிகமாகக் கூடும் என்பதை எதிர்பார்த்து, அதுவரை எடுக்கப்படும் இந்த நடவடிக்கையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு மின் வாரியம் தெரிவித்துள்ளது. நீர்மின் நிலையங்கள் மூலமும், காற்றாலை மூலமும் மின் உற்பத்தி அதிகரிக்கும் வரையில், அடுத்து வரும் மாதங்களில் மின் பற்றாக்குறை தொடரும். அதுவும் பகலில் மின் வெட்டு பற்றி மட்டும் முறையான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல பகுதிகளில் பகலில் மூன்று மணி நேரம் மின் வெட்டு ஏற்படுத்துவது மட்டுமன்றி, இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இதனால், அடுத்த சில வாரங்களுக்கு, தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளது.
 ------------------------------------------------------------------
யப்பா..என்ன ஒரு மாய்மாலம் புரிகிறது இந்த மின்வாரியம்..,ஏதோ கடந்த 4 மாதங்களாக மின்வெட்டே இல்லாத மாதிரியும்..இப்போதுதான் மின்வெட்டு அமல் படுத்துவது போலவும்..அதற்கு மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும்; அறிவிப்பு செய்திருக்கிறது.

கோவை,திருப்பூர்; உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த பல மாதங்களாகவே குறைந்தது மூன்று மணி நேரம் மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது.

தேர்தலுக்கு முன்பாக இந்த அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டு இருந்தால் சொந்தக்காசில் சூன்யம் வைத்துக் கொண்டது போல ஆகியிருக்கும் என்பது ஆளுங்கட்சிக்கு தெரிந்துதான் இருக்கிறது.அதனால்தான் இப்போது ஓட்டுப்பதிவுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்று சாமானியர்களுக்கும் தெரியாதா..?..
 அரசியல்வாதிகள் எப்போதுமே அரசியல்வாதிகள்தான் என்று இப்போதும் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால்..மக்கள்..தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரியும்
.

உபரி தகவல் : புகார் வலை தளம் http://www.consumercomplaints.in/complaints/tamilnadu-electricity-board-c203688.html  தேடிப்பாருங்கள் எவ்வளவு புகார்கள் ....
  

No comments:

Post a Comment